செய்திகள்

புத்திசாலி வணிகர் என விமர்சனம்: அமித்ஷாவைப் பார்த்து காந்தியே சிரிப்பார் - காந்தி பேரன் கிண்டல்

‘புத்திசாலி வணிகர்’ என விமர்சனம் செய்த அமித்ஷாவைப் பார்த்து காந்தியே சிரிப்பார் என்று காந்தி பேரன் கிண்டலாக கூறினார்.

மாலை மலர்

பா.ஜனதா தலைவர் அமித்ஷா நேற்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது காந்தியை புத்திசாலி வணிகர் என்றார். குஜராத்தில் வணிகத்தில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை ‘பனியா’ என்று குறிப்பிடுவார்கள். காந்தியும் பனியா வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் ‘சதுர் பனியர்’ (புத்திசாலி வணிகர்) என்றார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா கூறுகையில், ஜாதியத்துக்கு எதிராக போராடாமல், நாட்டின் தேசப்பிதாவை (காந்தியை) கூட ஜாதி கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். இதன் மூலம் பா.ஜனதாவின் குணம், சித்தாந்தம் வெளிப்பட்டுள்ளது. இவர்கள் நாட்டை எங்கு கொண்டு செல்லப் போகிறார்களோ என்றார்.

மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘மகாத்மா காந்தி, நமது நாட்டின் தேசப்பிதா. உலக அளவில் இந்தியாவின் அடையாளமாகவும் திகழ்கிறார். எனவே அமித்ஷா தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும். தான் கூறியதற்காக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், வேண்டுமென்றே தெரிவித்த துரதிர்ஷ்டவசமான நெறியற்றி வேண்டாத கருத்தாகும் என்றார்.

இதே போல் காந்தியின் பேரனும், முன்னாள் மேற்கு வங்காள கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி கூறுகையில், காந்தி தன்னை குறித்து விமர்ச்சித்து வரும் கேலிச்சித்தரங்களைக் கண்டு சிரிப்பார். அதே போல் அமித்ஷாவின் கருத்தை கேட்டிருந்தாலும், அதன் சுவையில்லாத தன்மை, மறைமுக தீய எண்ணம் ஆகியவற்றை கண்டு குலுங்க குலுங்க சிரித்திருப்பார் என்றார்.