அனுப்பர்பாளையம்:
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). இவர் சந்தைப்பேட்டை எதிரில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். ஒவ்வொரு பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில் இவர் பண்டிகையின் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஏதாவது ஒரு புதுமை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி அவரது கடையில் ஒரு டீயை ரூ.2-க்கு விற்பனை செய்தார். வழக்கமாக டீ ரூ.15-க்கும், காபி ரூ.20-க்கும் விற்பனை செய்து வந்த நிலையில், நேற்று ரூ.2-க்கு டீ விற்பனை செய்யப்பட்டதால் காலை முதலே அவருடைய கடையில் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்து மணிவண்ணன் கூறுகையில், எனது கடைக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து டீ, காபி குடிப்பது வழக்கம். எனவே ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது ஆசை. முக்கிய பண்டிகை நாட்களில் ஏதாவது புதுமை செய்து, வாடிக்கையாளர்களை கடைக்கு வரவழைப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி விழாவையொட்டி டீ ஒன்று ரூ.2-க்கு விற்பனை செய்தேன். காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இந்த ஏற்பாட்டை செய்திருந்தேன். ஆனால் நேற்று விடுமுறை நாள் என்பதால் வாடிக்கையாளர்கள் குறைவாகவே வந்தனர். எனவே மேலும் 3 மணி நேரம் கூட்டி மதியம் 1 மணி வரை ரூ.2-க்கு டீ விற்பனை செய்தேன்.
இதனால் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உள்பட 300 பேர் நேற்று மட்டும் கடைக்கு வந்து டீ குடித்தனர். இது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார். இந்த சம்பவம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.