ஜெருசலேம்:
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது ஜெருசலேம் நகரை பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.
இதனையடுத்து, 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து இஸ்ரேல் நிர்வகித்து வருகிறது. மேலும், அருகாமையில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் சில புதிய குடியேற்றங்களை இஸ்ரேல் அமைத்துள்ளது. எனினும், ஜெருசலேம் நகரம் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நகராகவே கருதப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சனிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ள ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மான் சஃபாதி, இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச ஆதரவை ஒன்று திரட்டும் நடவடிக்கையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.
மத்திய கிழக்கு நாடுகள், பிரான்ஸ் என பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விவகாரத்தைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பலமுறை பேசியுள்ளார். இதுதொடர்பாக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் பின்விளைவை ஏற்படுத்தும் என்பதால் நாம் மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ஜெருசலேம் நகரின் எதிர்காலம் என்ன? என்பது தொடர்பாக இஸ்ரேலிய தலைவர்களும், பாலஸ்தீன தலைவர்களும் நேருக்குநேர் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஐ.நா. சபையின் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி திட்டத்துக்கான தூதர் நிக்கோலே மிலடெனோவ் இன்று குறிப்பிட்டுள்ளார்.