தூத்துக்குடி:
தமிழக அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அறிவித்து உள்ளது. இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.
அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அதே போன்று வாகன போக்குவரத்தும் முடங்கியது.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. இதனால் பலர் திருமண நிகழ்ச்சிகளுக்கு இருசக்கர வாகனங்களில் சென்றனர். அதே போன்று வேன், கார்களிலும் பலர் திருமண வீடுகளுக்கு சென்றனர். இதனால் கடந்த வாரங்களைவிட சற்று கூடுதலாக மக்கள் நடமாட்டம் இருந்தது. பொதுமக்கள் திருமண வீடுகளுக்கு செல்ல முடியாமலும், திருமண வீட்டார் பொருட்கள் வாங்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே நடந்த வாகன சோதனையின் போது, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை போலீசார் மடக்கினர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை நடத்தினார். தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை கொடுத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
இந்த ஆயிவின் போது, மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஆறுமுகநேரி, திருச்செந்தூர், எட்டயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.