செய்திகள்

ஓசூர் அருகே 2 வாலிபர்கள் படுகொலை: நண்பர்கள் ஆத்திரம்

ஓசூர் அருகே மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பா என்பவரின் மகன் மஞ்சுநாத் (வயது 23), இதே பகுதியைச் சேர்ந்த முனியப்பா என்பவரின் மகன் பரத் (23).

ஈச்சங்கூரை சேர்ந்த வர்கள் யஷ்வந்த், மதுசூதனன். கொடியாளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், ஹரீஷ். கக்கனூரை சேர்ந்தவர் முனிராஜ். இவர்கள் 7 பேரும் நண்பர்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இது தவிர இடம் காலி செய்வது தொடர்பாக கட்டப்பஞ்சாயத்தும் செய்து வந்தனர்.

நேற்று இரவு 7 பேரும் பாகலூரை அடுத்த கொத்தப்பள்ளியில் உள்ள ஒரு குட்டை அருகே 7 பேரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பின்னர் மஞ்சுநாத்தும் பரத்தும் மற்ற 5 பேரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு ரூ. 10 லட்சம் தரவேண்டும் என்றும் மிரட்டினர்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது. நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து மஞ்சுநாத், பரத் ஆகியோரின் கை-கால்களை கட்டிப்போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். வெட்டுப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் குட்டைக்குள் வீசிவிட்டு 5 பேரும் பாகலூர் போலீஸ் நிலையம் சென்று போலீசில் சரண் அடைந்தனர்.

அவர்கள் போலீஸ் நிலையம் வந்தபிறகு தான் இரட்டைக் கொலை நடந்த விவரம் போலீசாருக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜேந்திரன், பாகலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டைக்கொலை குறித்து சரண் அடைந்த முனிராஜ், யஷ்வந்த், சுரேஷ், ஹரீஷ், மதுசூதனன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீதும் பெங்களூரு போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

ஓசூரில் நடந்த இந்த இரட்டைக்கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.