செய்திகள்

ராகுல் காந்தியுடன் கள்ளத்தொடர்பு - ஹர்திக் பட்டேல் மீது முன்னாள் நண்பர் குற்றச்சாட்டு

பட்டேல் இன மக்களுக்கான உரிய இட ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியுடன் ரகசியமாக சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி கைதாகி, ஜாமினில் விடுதலை ஆனவர்

பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஹர்திக் பட்டேல். குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக இவர் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை 3 முறை ஹர்திக் பட்டேல் ரகசியமாக சந்தித்ததாக ஹர்திக்கின் நெருங்கிய நண்பர் குற்றச்சாட்டியுள்ளார்.

இருமுறை டெல்லியிலும், மற்றொரு முறை அகமதாபாத் நகரிலும், இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி அமைப்பின் மிக முக்கிய தலைவரும், ஹர்திக் பட்டேலின் மிக நெருங்கிய முன்னாள் நண்பருமான தினேஷ் பாம்பானியா குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் நட்சத்திர ஓட்டலில் ராகுலை சந்தித்து பேசியதன் மூலம் தனது அமைப்பினரை ஹர்திக் தவறாக வழிநடத்தியதாக அவர் தெரிவித்தார்.

அகமதாபாத் நகரில் நடந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்ததாகவும், ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேராவையும் ஒருமுறை டெல்லியில் ஹர்திக் பட்டேல் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்புகளுக்காக ஹர்திக் பின்னர் தனது அமைப்பினரிடம் வருத்தம் தெரிவித்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும், பட்டேல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு கேட்டு போட்டார் மாவட்டத்தில் போராட்டம் நடத்துவதற்காக சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஹர்திக் பட்டேல் 81 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், குறிப்பிட்ட தேதியில் போராட்டம் நடக்காததால் அந்தப் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் தினேஷ் பாம்பானியா குற்றம்சாட்டியுள்ளார்.