கோப்புபடம் 
செய்திகள்

நாடு முழுவதும் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு - மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வேலை பார்த்து வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைக்காத சூழல் உருவானது. அதே போல் ஆதரவற்ற ஏழை மக்களும் இந்த ஊரடங்கால் பட்டினிக்கு ஆளாகினர். எனவே நாடு முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 19 ஆயிரத்து 460 சிறப்பு முகாம்களில் 75 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல் தங்குவதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வந்த 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் 27 ஆயிரத்து 661 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.