சேலம்:
சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசால் 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்பட்டதனை தொடர்ந்து, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை உத்திரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்திரவின் பேரில் பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 11 அம்மா உணவகங்களும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அனைத்து அம்மா உணவகங்களிலும் காலை வேளையில் இட்லியும், மதிய வேளையில் சாம்பார் சாதம், தக்காளி சாதம் மற்றும் தயிர் சாதமும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 15 நாட்களில் 73 ஆயிரத்து 738 பயனாளிகளுக்கு அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இன்று ( வியாழக்கிழமை) முதல் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களிலுள்ள 11 அம்மா உணவகங்களிலும், மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை ஒன்று வழங்கப்படும். ஆதரவற்றோர், வயதானோர், சாலையோரங்களில் வசிப்போர் உள்ளிட்ட அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்ள வரும் அனைத்து பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் மதிய வேளை உணவுடன் சேர்த்து விலையில்லா முட்டை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.