பிரிட்டன் பாராளுமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நரி 
செய்திகள்

பிரிட்டன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நரி

லண்டனில் உள்ள பிரிட்டன் பாராளுமன்ற அலுவலகத்திற்குள் நேற்று மாலை நரி நுழைந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலை மலர்

லண்டன்:

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்தது பிரிட்டன் ஆகும். பிரிட்டன் அரசின் பாராளுமன்றம் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் அமைந்துள்ளது. 

இந்நிலையில், லண்டனில் உள்ள பிரிட்டன் பாராளுமன்ற அலுவலகத்திற்குள் நேற்று மாலை நரி நுழைந்ததால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

பிரிட்டன் பாராளுமன்றத்தின் அலுவலகமான போர்ட்கல்லிஸ் ஹவுஸ் கட்டிடத்திற்குள் நேற்று மாலை நரி ஒன்று நுழைந்தது. எஸ்கலேட்டரில் ஏறிய நரி நான்காவது மாடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களின் பிரதான கட்டிடத்திற்குள் நுழைந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் நரியை பிடிக்க முயன்றனர். சற்று ஓட்டம் காட்டிய நரி பின்னர் பிடிபட்டது. 

இதையடுத்து நரி வனப்பகுதிக்குள் விடப்பட்டது. பாராளுமன்ற அலுவலகத்திற்குள் நரி நுழைந்த சம்பவம் வெஸ்ட்மின்ஸ்டரில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.  

இது குறித்து ஆளும் கட்சி எம்.பி.யான ஜுலியா லோபஸ் ‘குழுவினரே, அலுவலக வேலைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, இங்கே எஸ்கலேட்டரில் நரி ஒன்று வருகிறது அதை கவனியுங்கள். கடந்த 2017ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் எத்தனையோ விசித்திர சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். ஆனால் இதுதான் மற்றவைகளை விட முதலிடத்தில் உள்ளது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.