கொரோனா வைரஸ் சிகிச்சை - கோப்புப்படம் 
செய்திகள்

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

கோவையில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மேலும் கொரோனா சந்தேகத்துடன் நேற்று 14 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக கிருமி நாசினி தெளிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதுடன், தடுப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக இருக்கிறது.

கடந்த 23-ந் தேதியில் இருந்து யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. ஆனால் கொரோனா சந்தேகத்துடன் தினமும் ஏராளமானோர் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும் என்றும், எக்காரணத்தைக்கொண்டும் வெளியே செல்லக்கூடாது என்றும் டாக்டர்கள் அறிவுரை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கொரோனா சந்தேகத்துடன் 14 பேர் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள் ஆவார்கள். அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவையை சேர்ந்த 7 பேர், திருப்பூரை சேர்ந்த ஒருவர் என்று மொத்தம் 8 பேர் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.