ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திவ்யா உத்தரவுக்கு இணங்க வனச்சரகர் செந்தில் குமார் தலைமையில் வனவர் அறிவழகன் வனக் காப்பாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட வனத்துறையினர் பரப்பலாறு அணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் 4 பேர் நின்றிருந்தனர்.
அவர்களை விசாரித்ததில் சத்திரப்பட்டி புதுக்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(வயது 45), புலியூர் நத்தம் செல்வராஜ் (36), வடகாடு கார்த்திகைவேல்(35), வண்டிப்பாதை சேகர் (25) என்பதும், அவர்கள் 4 பேரும் முயல்களை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த துப்பாக்கி , தோட்டாக்கள், வேட்டையாடப்பட்ட முயல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.