புதுடெல்லி:
உயர்மதிப்பிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதை தொடர்ந்து கடந்த ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டது.
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக வாஜ்பாய் மந்திரி சபையில் நிதி மந்திரியாக இருந்தவரும், பாரதிய ஜனதா மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்கா விமர்சித்து இருந்தார். அவர் பிரதமர் மோடியையும், நிதிமந்திரி அருண்ஜெட்லியையும் கடுமையாக சாடியிருந்தார்.
இதேபோல பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் பொருளாதார சரிவுக்கு மோடி தலைமையிலான அரசுதான் காரணம் என்று பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரியும், பத்திரிகையாளருமான அருண்ஷோரி குற்றம் சாட்டியுள்ளார். பொருளாதார நிபுணரான அவர் இதுகுறித்து கூறி இருப்பதாவது:-
பணமதிப்பு நீக்கம் என்பது அரசே ஊக்குவித்த மிகப்பெரிய கறுப்பை வெள்ளையாகும் மோசடி பணமாற்றும் திட்டமாகும். தடை செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது.
அப்படியென்றால் பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணம் முழுவதும் வங்கிகளுக்குள் வந்து வெள்ளைப் பணமாகி விட்டது. வரிவிதிப்பில் சிக்காத இந்த பணம் எங்கும் யாராலும் அழிக்கப்படவில்லை.
பணமதிப்பு நீக்கம் என்பது தற்கொலைக்கு சமமானது. ரூபாய் நோட்டு வாபஸ் துணிச்சலான செயல் என்றால் தற்கொலையையும் அப்படித்தான் கருத வேண்டும்.
பொருளாதார வளர்ச்சி வீதம் சரிவதற்கும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் மறைவதற்கும் மோடி தலைமையிலான அரசுதான் காரணம்.
நாட்டை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான பொருளாதார முடிவுகள் மூடிய அறைக்குள் எடுக்கப்படுகின்றன. பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் குழுவினர் விளைவுகளை பற்றி ஆராயாமல் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்கள்.
அரசை விமர்சிப்பவர்களை, பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து விரக்தி அடைந்தவர்கள் என்று முத்திரை குத்துகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். கட்சிக்குள் விரக்தியோடு இருப்பவர்களின் பட்டியலை நீங்களே வெளியிடுங்கள். யார் உண்மையை சொல்கிறார்கள். யார் விரக்தியில் பேசுகிறார்கள் என்பது மக்களுக்கு புரிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.