காங்டோக்:
மேற்கு சிக்கிமில் உள்ள மல்பாசே பகுதியில் 1940-ம் ஆண்டு பிறந்தவர் நார் பகதூர் பண்டாரி. ஆரம்ப காலத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றிய இவர், பின்னர் அரசியலில் நுழைந்தார்.
ஜனதா பரிசத் கட்சியின் சார்பில் 1979-ம் ஆண்டு முதன்முறையாக சிக்கிம் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். சிக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு முதல்வராக பணியாற்றும் 2-வது நபர் என்ற பெருமையை அப்போது பெற்றார்.
அதன்பின் சிக்கிம் சங்க்ராம் பரிசத் என்ற கட்சியை தொடங்கி, அந்த கட்சி சார்பில் 1984 மற்றும் 1989 ஆகிய இரண்டு முறை முதல்வராக பணியாற்றினார். இவருக்கு தில் குல்மாரி என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மனை தில் குமாரி முன்னாள் எம்.பி. ஆவார்.
77 வயதாகும் இவர் உடல்நிலை சரியில்லாமல் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.