செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் ரூ. 6 லட்சம் நகை கொள்ளை

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மர்ம மனிதர்கள் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன செவலை கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சாந்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்பழகன் இறந்து விட்டார். இதனால் சாந்தி தனது உறவினர்களுடன் சின்னசெவலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

சாந்தியின் மகள் அனிதா. இவர் நேற்று தனது கணவர் ஜோதியுடன் சின்னசெவலையில் உள்ள தனது தாய் சாந்தியின் வீட்டுக்கு வந்தார். அதன் பின்னர் சாந்தி சிறுவானூருக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் அனிதா, அவரது கணவர் ஜோதி மற்றும் உறவினர்கள் மட்டும் இருந்தனர்.

இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் 5 பேர் நள்ளிரவில் கையில் கத்தி, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிகொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். அவர்கள் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டனர். சுதாரித்து கொண்ட மர்ம மனிதர்கள் அனிதா, அவரது கணவர் ஜோதி மற்றும் உறவினர்கள் கழுத்தில் கத்தியை வைத்தனர்.

சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவோம் என்றனர். பின்னர் கழுத்தில் கிடக்கும் நகைகளை கழட்டி கொடுங்கள் என்று மிரட்டினர். அப்போது நகைகளை கழற்றாதீர்கள் என்று ஜோதி கூறினார்.

ஆத்திரம் அடைந்த மர்ம மனிதர்கள் ஜோதியை சரமாரியாக தாக்கினர். இதைதொடர்ந்து அனிதா மற்றும் உறவினர் பெண்கள் 4 பேரின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை மர்ம மனிதர்கள் பறித்தனர். மேலும் ஜோதியின் மோதிரத்தையும் பிடுங்கினர். இதையடுத்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்தனர்.

அதில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பெட்டியை எடுத்து பணம் இருக்கிறதா என்று பார்த்தனர். அதில் பணம் ஏதும் இல்லாததால் பெட்டியை வீட்டுக்கு வெளியே வீசினர். இதையடுத்து கொள்ளையடித்த நகைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன 30 பவுன் நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

கொள்ளை சம்பவம் பற்றி திருவெண்ணைநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கை ரேகைகளை சேகரித்தனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சில அடி தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.