முக ஸ்டாலின் 
செய்திகள்

முன்னாள் மேயர் கொலை: குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

முன்னாள் மேயர் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட 3 பேர் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல. ஆண்களுக்கு நிகராக, சமமாக பொறுப்புகளை வழங்கும் இயக்கம் என்பதற்கிணங்க, 1996-ல் நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஸ்வரி கட்சிப் பணியிலும், பொதுமக்களுக்கான பணியிலும் அனைவரும் போற்றும் வகையில் சிறப்பாக பணியாற்றி தலைவர் கருணாநிதியின் பாராட்டைப் பெற்றவர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது. முன்னாள் மேயர் நெல்லை உமா மகேஸ்வரி கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.