பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது மந்திரியாக பதவி வகித்தவர் சி.பி. யோகேஷ்வர். கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க.வில் இருந்து காங்கிரசுக்கு தாவிய இவர், பின்னர் பழைய சட்டமன்ற தொகுதியான சென்னப்பட்டினாவில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக யோகேஷ்வர் இன்று அறிவித்துள்ளார். விலகல் முடிவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எனது தொகுதியை மேம்படுத்துவதற்காகதான் காங்கிரசில் சேர்ந்தேன். ஆனால், சில தலைவர்களின் முட்டுக்கட்டையால் மூச்சுத்திணறும் சூழ்நிலையில் சிக்கி தவித்து வந்தேன்.
எனவே, எனது ராஜினாமா கடிதத்தை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி விட்டேன். ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எனது அடுத்தகட்ட முடிவை வரும் 22-ம் தேதி அறிவிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.