செய்திகள்

முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை விடுதலை ஆகிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நீதிபதி கர்ணன் நாளை விடுதலை செய்யப்படுகிறார்.

கொல்கத்தா:

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க போலீசுக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார். இந்த காலத்தில் அவரது பதவிக்காலமும் முடிவடைந்தது.

40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அவர் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கோவையில் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் அவரது வக்கீல் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து கொல்கத்தா நகரில் உள்ள பிரசிடென்சி சீர்திருத்த இல்லத்தில் நிதிபதி கர்ணன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணனின் 6 மாத தண்டனைக் காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் நாளை விடுதலை செய்யப்படுகிறார். அவரை அழைத்து செல்வதற்காக அவரது மனைவி பேராசிரியை சரஸ்வதி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கொல்கத்தா வருகின்றனர்.

இதுகுறித்து நீதிபதி கர்ணனின் மனைவி சரஸ்வதி  பிடிஐ செய்தியாளரிடம் கூறும்போது, “அவர் (கர்ணன்) நாளை விடுதலை செய்யப்படுகிறார். நான் அவரை சென்னைக்கு அழைத்து செல்வதற்காக கொல்கத்தா வருகிறேன். கடைசியாக அவரை நான் ஒன்றரை மாதத்திற்கு முன்பு சந்தித்தேன். அவர் நல்ல மனோதிடத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருந்தார்” என்றார்.