பி. வள்ளல் பெருமான் 
செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பி. வள்ளல் பெருமான் காலமானார்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ப.சிதம்பரத்தின் ஆதரவாளருமான முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான் காலமானார்.

சென்னை:

முன்னாள் காங்கிரஸ் எம்.பி. வள்ளல்பெருமான் (65) இன்று மரணம் அடைந்தார்.

டாக்டர் வள்ளல் பெருமான் 3 முறை எம்.பி.யாகவும் ஒரு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். சிதம்பரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் கடந்த 1984, 1989, 1991 ஆகிய 3 தேர்தல்களில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

2001-சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

டாக்டர் வள்ளல் பெருமானுக்கு சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவரது உடல் நிலை திடீரென்று மோசமாகி உயிர் பிரிந்தது.

அதிகாலை 4.30 மணியளவில் அவரது உடல் சொந்த ஊரான சிதம்பரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள இல்லத்தில் வள்ளல் பெருமான் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. வள்ளல் பெருமானின் திடீர் மரணம் பற்றி அறிந்ததும் காங்கிரசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமான காங்கிரசார் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்

வள்ளல்பெருமானின் உடல் நாளை காலை 11 மணிக்கு சிதம்பரம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.

வள்ளல் பெருமான் பா.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். 65 வயதாகும் வள்ளல் பெருமான் 1977-ல் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். இவரது மனைவி சரளா வள்ளல் பெருமானும் டாக்டர் ஆவார். இவர்களுக்கு அருண்குமார் என்ற ஒரேமகன் உள்ளார்.