தேன்கனிக்கோட்டை:
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா காப்புக்காட்டில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 9 யானைகள் ஓசூர் சானமாவு காப்புக்காட்டிற்கு வந்தன.
அந்த யானைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தன.
ஓசூர் சானமாவு காட்டில் இருந்த 9 யானைகளை விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 9 யானைகளும், பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும் விரட்டப்பட்டன. இந்த யானைகள் அனைத்தும் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்புக் காட்டிற்கு விரட்டினார்கள்.
இதேபோல் நேற்று மதியம் 3 மணிக்கு அய்யூர் சாலையையொட்டி விவசாய நிலத்தில், ஒற்றை ஆண் யானை நின்றுகொண்டு இருந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரம் விவசாய நிலத்தில் உலா வந்த யானை, பின்னர் சூரப்பன்குட்டை வனப்பகுதிக்கு சென்றது. பகல் நேரத்தில் ஒற்றை யானை சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.
தற்போது தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்புக்காட்டில் இந்த யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு மீண்டும் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியையொட்டி யாரும் இரவு நேரத்தில் செல்ல வேண்டாம்.
மேலும் போடூர், ராமாபுரம், சானமாவு, மார சமுத்திரம், லக்கசமுத்திரம் உள்பட 10 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம். மேலும், வீட்டின் முன்பு விளக்குகளை எரிய விடவேண்டும். அதேபோல் விவசாய நிலங்களுக்குள் யானைகள் வந்த தகவல் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கிராம மக்கள் யாரும் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று 10 கிராம மக்களுக்கும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் அப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர்.