கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்த நாரிபாளையம், நவமலை, கோபால்சாமி மலை உள்ளிட்ட மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஒற்றை காட்டு யானை நடமாடி வந்தது. ஊருக்குள் புகும் இந்த யானை அங்குள்ள வீடுகள், கடைகளை உடைத்து அங்கிருக்கும் அரிசி, காய்கறி வகைகளை தின்று தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.
அரிசியை மட்டுமே விரும்பி உண்ணும் இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் அரிசிராஜா என்கிற சாப்பாட்டு ராமன் என பெயர் வைத்து அழைத்து வந்தனர். கடந்த ஆண்டு மே மாதம் நவமலை பகுதியில் சுற்றித்திரிந்த அந்த யானை அந்த பகுதியை சேர்ந்த பெண் மற்றும் விவசாயி ஒருவரை மிதித்து கொன்றது.
இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி அர்த்தநாரிபாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த விவசாயியையும் மிதித்து கொன்றது.
இதையடுத்து தொடர்ந்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் இந்த யானையை பிடிக்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் கடந்த ஆண்டு நவ.14-ந் தேதி தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசி ராஜா யானையை கலீம், கபில் என்ற கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர். பின்னர் அந்த யானையை டாப்சிலிப் பகுதியில் வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு தற்போது அந்த யானை கூண்டுக்குள் அடைத்து வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த யானைக்கு வனத்துறையினர் முத்து என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வரகளியாறு முகாமில் இந்த யானையை தவிர்த்து மொத்தம் 27 யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானைக்கும் நாங்கள் பெயர் வைப்பது வழக்கம். அரிசிராஜா என்பது பொதுமக்கள் வைத்த பெயர் என்பதால் இந்த யானைக்கும் வேறு பெயர் வைக்க முடிவு செய்தோம். இதற்காக 10 பெயர்களை தேர்வு செய்து தலைமை வன பாதுகாவலருக்கு அனுப்பினோம்.
அவர் இந்த 10 பெயர்களில் ஒரு பெயரை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் மாரிமுத்துவுக்கு உத்தரவிட்டார். அதன்படி அரிசிராஜா யானைக்கு முத்து என்று பெயர் சூட்டினோம்.
இதேபோல் கடந்த ஆண்டு சின்னதடாகம் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வந்த சின்னதம்பி யானையை பிடித்து வந்து கூண்டில் அடைத்து பராமரித்து வந்தோம். 132 நாட்கள் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த அந்த யானை தற்போது எங்களின் 42 வகை கட்டளைக்கு அடி பணிந்துள்ளது.
இதையடுத்து அந்த யானையை வெளியில் கொண்டு வந்து பயிற்சி அளித்து வருகிறோம் என்றனர்.