கும்பகோணம்:
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் கருகி 10 பேர் பலியானார்கள். இவர்களில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் அகிலாவும் ஒருவர்.
கும்பகோணம் பகவத் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி-சாந்தி தம்பதியினரின் ஒரே மகள் அகிலா என்ற அகிலாண்டேஸ்வரி(வயது 24).
இவர் சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய பூஜா, நிஷா, நிவேதா, அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றிருந்தனர். அவர்களுடன் சென்ற அகிலாவும் பலியானார்.
பலியான அகிலா, அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். கும்பகோணம் பாணாதுறையில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு படித்த போது இரண்டு வகுப்புகளிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதன்பின்னர் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அகிலா, இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.
இந்த நிலையில் குரங்கணி தீ விபத்தில் பலியான அகிலாவின் உடல் மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று இரவு 9.30 மணிக்கு பகவத் விநாயகர் கோவில் தெருவில் உள்ள வீட்டுக்கு அகிலா உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அகிலா உடலுக்கு கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன், மற்றும் பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அகிலாவின் உடல் இன்று பிற்பகலில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கும்பகோணம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.