ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கு 1996-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய எழும்பூர் கோர்ட்டு முடிவு செய்தது. இதற்காக இருவரையும் நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும் காணொலி காட்சி மூலம் தன்னிடம் குற்றச்சாட்டு பதிவு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
அவரிடம் காணொலி காட்சி மூலம் விசாரிக்க கோர்ட்டு முடிவு செய்தது. இதற்கிடையில், சசிகலா மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளை முன்கூட்டியே தரவேண்டும்’ என்று கூறியிருந்தார். இதற்கு அமலாக்கப்பிரிவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து சசிகலா தாக்கல் செய்த இந்த மனுவை எழும்பூர் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜாகீர்உசேன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவை, கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலாவிடம் காணொலி காட்சி மூலம் வருகிற 21-ந் தேதி நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில சிறை நிர்வாகம் செய்யவேண்டும்’ என்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது சசிகலா தரப்பு வக்கீல் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘குற்றச்சாட்டு பதிவின்போது, ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்வியை தமிழில் மொழி பெயர்த்துக் கூற சசிகலாவுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.