செய்திகள்

பெரம்பலூரில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கால்பந்து-கூடைப்பந்து போட்டி

பெரம்பலூர் விளையாட்டரங்கில் முதல்- அமைச்சர் கோப்பைக்கான கால்பந்து, கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

மாலை மலர்

பெரம்பலூர்:

பெரம்பலூரில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகளம் மற்றும் கபடி, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன. அதனை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் விளையாட்டரங்கில் கால்பந்து, கூடைப்பந்து, மேஜைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரர்-வீராங்கனைகள் வந்து ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மழை தூறி கொண்டே இருந்ததால் போட்டிகள் நடத்துவதில் சற்று சிரமம் ஏற்பட்டது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் வீரர், வீராங்கனைகள் மகிழ்ச்சியுடன் விளையாடியதை, பார்வையாளர்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்தினர். உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற அணிகளை தேர்வு செய்தனர்.

வெற்றி பெற்ற அணியில் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு இன்று (வியாழக்கிழமை) பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது. மேலும் இன்று ஆக்கி, டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு இடையூறு ஏதும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கண்காணித்து ஆலோசனை வழங்கினார்.