செய்திகள்

ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஆதரவாக தீர்ப்பு பெற உ.பி. அதிகாரிகள் முயற்சியா? விசாரணை நடத்த உத்தரவு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஆதரவாக தீர்ப்பு பெற உ.பி. அதிகாரிகள் முயற்சி செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

மாலை மலர்

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத்துக்கு, கால்நடை தீவன ஊழல் தொடர்பான 2-வது வழக்கில் ராஞ்சி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி சிவ்பால் சிங் 3½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 6-ந் தேதி தீர்ப்பு வழங்கினார். முன்னதாக 4-ந் தேதி இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதி, லாலு பிரசாத்துக்கு ஆதரவாக சிலரிடம் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாக கூறினார்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்ட கலெக்டர் மன்னான் அக்தர், துணை கலெக்டர் பைர்பால் சிங் ஆகியோர் லாலு பிரசாத்துக்கு ஆதரவாக தனிக்கோர்ட்டு நீதிபதி சிவ்பால் சிங்கிடம் பேசியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மன்னான் அக்தர் மறுத்து உள்ளார்.