ராஞ்சி:
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள ஆட்சி காலங்களில் கால்நடை திவனங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருகின்றனர்.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்-மந்திரிகள் லல்லு பிரசாத்யாதவ், ஜெகநாத்மிஸ்ரா உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றனர்.
ரூ.1000 கோடி கால் நடை தீவன ஊழல் வழக்கில் அப்போதைய பீகார் அரசில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சஜல் சக்கரவர்த்திக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது. பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்க்கண்ட் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு அந்த மாநிலத்தின் தலைமை செயலாளராக பொறுப்பேற்றார்.
2014 மே முதல் 2015 ஜனவரி வரை தலைமை செயலாளராக பதவி வகித்தார்.
சஜல் சக்கரவர்த்திக்கு எதிரான ரூ.37.70 கோடி கால்நடை தீவன முறைகேடு வழக்கு ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக கோர்ட்டு அறிவித்தது. இதை தொடர்ந்து சஜல் சக்கரவர்த்தி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கான தண்டனை விவரத்தை ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு 21-ந்தேதி அறிவிக்கிறது. கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 2-வது ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
இதற்கு முன்பு ஸ்ரீபதி நாராயண துபே என்பவர் தண்டனை பெற்று இருந்தார். சஜல் 2-வது முறையாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அவருக்கு 4 ஆண்டு மற்றும் 6 மாதம் தண்டனை விதிக்கப்பட்டது. 2012-ம் ஆண்டில் அவரை ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு விடுவித்து இருந்தது.