செய்திகள்

தங்கத்திற்கு புதிய வரி என்ன? இன்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தலைநகர் புதுடெல்லியில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில், தங்கம் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி நிர்ணயிக்கப்படுகிறது.

மாலை மலர்

புதுடெல்லி:

ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது.

ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை அமலாகிறது. அதற்கு முன், அனைத்து மாநிலங்களும், ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை, சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும். பல மாநிலங்கள், அதை நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்னும் இதற்காக சட்டசபை கூட்டவில்லை. 

இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரியை இறுதி செய்வதற்கு கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது. இதில், மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஜி.எஸ்.டி., வரி விதிப்பில், 5, 12, 14, 28 சதவீதம் என, நான்கு வித வரிகள் உள்ளன. 

முன்னதாக கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற 14-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 1,200 பொருட்கள், 500க்கும் மேற்பட்ட சேவைகளுக்கு, வரி நிர்ணயித்தது. 

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த 15-வது கவுன்சில் கூட்டம் நிதிமந்திரி அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடைபெறுகிறது. 

புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கனவே விட்டுப்போன தங்கம், ஜவுளிகள், காலணி, பிஸ்கட்டுகள் மற்றும் பீடி ஆகியவற்றின் மீதான வரி விதிப்புகள் இறுதி செய்யப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழக வணிக வரித்துறை செயலர் சந்திரமவுலி, கூடுதல் ஆணையர் ஞான சேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, டில்லி சென்றுள்ளது.