செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கருப்பந்துறை பாலம் மூழ்கியது

தென்மாவட்டங்களில் ஒக்கி புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்தது.

மாலை மலர்

நெல்லை:

வங்கக்கடலில் ஏற்பட்ட ஓகி புயல் காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

1992-ம் ஆண்டு பெய்த மழையை போல 25 ஆண்டுகளுக்கு பின் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கனமழையினால் அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

பாபநாசம் அணை பகுதியில் ஒரே நாளில் 451 மில்லி மீட்டர் மழை பெய்ததால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதே போல் சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்தும் அதிக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கடனா அணை நிரம்பியதால் அணைக்கு வரும் 7,500 கனஅடி தண்ணீர் அப்படியே ஆற்றில் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று மாலையில் இருந்தே ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவு தாமிரபரணி கரையோர மண்டபங்களை வெள்ளம் மூழ்கடித்தது. இன்று காலை நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை ஆற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.

இதேபோல ஆற்றின் கரையோரத்தில் உள்ள அனைத்து மண்டபங்களுமே வெள்ளத்தில் மூழ்கின. அம்பை, கல்லிடைக்குறிச்சி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்று ஓரம் உள்ள வயல்வெளிகளிலும்  வெள்ளம் புகுந்தது.

மேலப்பாளையம்-நெல்லை டவுணை இணைக்கும் குறுக்குத்துறை ஆற்று பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையத்திற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நெல்லை உள்ளிட்ட இடங்களில் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். பாபநாசம் மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதுகாப் பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைக்காக பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட குழுவினர் ஆற்றின் கரையோர பகுதி மற்றும் கால்வாய் கரையோர பகுதிகளை கண்காணித்து வருகிறார்கள்.

கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்படா வண்ணம் தடுக்கவும், உடைப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் மணல் மூட்டைகளுடன் பொதுப் பணித்துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட அனைத்து ஆற்று ஓர பகுதிகளிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதேபோல மாவட்டத்தில் உள்ள சிற்றாறு, வடக்கு பச்சையாறு, கடனா நதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம் மலையில் முண்டந்துறை செல்லும் இரும்பு பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. அப்பகுதியில் பாலம் அமைக்கும் பணி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

அகஸ்தியர் அருவி பகுதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலையணை பகுதியிலும் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பாபநாசம் மலைப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடி மூடப்பட்டது.