செய்திகள்

குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் 2-வது நாளாக இன்றும் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

தென்காசி:

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் 3-வது நாளாக மழை நீடித்தது. தென்காசி, குற்றாலம், சங்கரன்கோவில், களக்காடு உள்பட மாவட்டம் முழுவதும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் 2-வது நாளாக இன்றும் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயினருவியில் சீசன் காலங்களை விட அருவியில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. ஆர்ச்சை தாண்டி தடாகத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மெயினருவி பகுதிக்கு யாருமே செல்ல முடியாத வகையில் பயங்கர சத்தத்துடன் அருவியில் தண்ணீர் விழுந்து வருகிறது. மெயினருவி அருகே இருந்த மின்கம்பங்கள் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதால் அருவி பகுதி முழுவதும் நேற்றிரவு இருளில் மூழ்கியது.

வெள்ளப்பெருக்கால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் என்பதால் குற்றாலத்திற்கு வந்த அய்யப்ப பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

ஐந்தருவியிலும் இன்று காலை கடும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. வழக்கமாக ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கால் பாறைகள் தெரியாத அளவிற்கு மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. இதனால் ஐந்தருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்தனர்.

பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியின் முன்பு உள்ள தடாகத்தில் தண்ணீர் கொட்டி வருகிறது. அருவிக்கரையில் உள்ள கடைகளின் முன்பு வெள்ளம் பாய்ந்தோடியது. மேலும் புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிற்றாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

பாபநாசம் மழை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அகஸ்தியர் அருவிக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மலை பகுதியில் செல்லும்போது மரங்கள் முறிந்து விழ வாய்ப்புள்ளது. எனவே பாபநாசம் சோதனை சாவடியில் நேற்று மதியம் முதல் வனத்துறையினர் மூடிவிட்டனர். இதனால் பாபநாசம் மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் அருவிக்கு செல்லும் சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது.