செய்திகள்

தஞ்சாவூர், வேலூரில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான சேவை

மத்திய அரசின் உதான் திட்டத்தின்கீழ் தஞ்சை, வேலூரில் இருந்து சென்னைக்கு விரைவில் விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் உதான் என்ற திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந் தேதி இமாச்சலபிரதேசத்தில் தொடங்கிவைத்தார். பிராந்திய அளவில் விமான போக்குவரத்தை தொடங்கி சாதாரண மக்களும் விமான பயணம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

ஒரு மணி நேர விமான பயணம் அல்லது 500 கிலோ மீட்டர் தூரம் கொண்ட விமான பயணங்களுக்கு அதிகபட்சம் ரூ.2,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல்கட்டமாக சிம்லா-டெல்லி, கடப்பா-ஐதராபாத் உள்பட 128 வழித்தடங்களில் 5 விமான நிறுவனங்கள் போக்குவரத்தை தொடங்க அனுமதிக்கப்பட்டன.

இந்நிலையில் 2-வது கட்டமாக 15 விமான நிறுவனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இயக்குபவர்கள் 325 வழித்தடங்களில் வான்வழி போக்குவரத்தை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதில் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி-சென்னை (இண்டிகோ விமான நிறுவனம்), கேரள மாநிலம் கண்ணூர்-சென்னை (இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட்), தஞ்சை-சென்னை (ஸ்பைஸ்ஜெட்), வேலூர்-பெங்களூரு மற்றும் வேலூர்-சென்னை (டர்போ ஏவியேஷன்) இடையே விமான போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது.

முதல்முறையாக விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ள தஞ்சையில், அங்குள்ள விமானப்படை தளத்தில் இருந்து சென்னை விமானங்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2-வது கட்டத்தில் 25 புதிய விமான நிலையங்கள், 31 புதிய ஹெலிகாப்டர் தளங்கள் வான் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளன. உதான் திட்டத்தில் ஹெலிகாப்டர் போக்குவரத்து சேர்க்கப்பட்டுள்ளதும் இதுதான் முதல்முறை என்று விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார். #tamilnews