பெங்களூரு:
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் துபாயில் இருந்து 183 பயணிகளுடன் இன்று மாலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு விமான நிலையம் நோக்கி வந்தது.
விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஓடுபாதையில் தரையிறங்கியதும் பயணிகளை இறக்கிவிடும் முனையத்தை நோக்கி ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்து. அப்போது எதிர்பாராத வகையில் ஓடுபாதையில் இருந்து நழுவிச் சென்ற விமானம், பக்கவாட்டில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்தது.
உடனடியாக மீட்பு படையினர் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிர் பயத்தில் விமானத்துக்குள் தவித்துக் கொண்டிருந்த 183 பயணிகளும் அவசர ஏணியின் வழியாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மங்களூரு விமான நிலைய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.