கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் 3-வது தெருவைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் ராஜா (வயது 26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துமாரி (23). இவர்களுக்கு மாரிசெல்வம் (3), ராஜாசிங் (1) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ராஜா தனது மனைவி, குழந்தைகளுடன் கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவில் ராஜா வழக்கம்போல் ஜோதிநகர் ஆட்டோ ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இரவு 11 மணி அளவில் ராஜாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனே அவர் தனது மோட்டார் சைக்கிளில் தனியாக புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள கசவன்குன்று கிராமத்துக்கு முன்பாக உள்ள காட்டு பகுதியில் ராஜா தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் அங்கு தனியாக நின்றது. ராஜா பனியன், பேண்ட் அணிந்து இருந்தார். அவரது சட்டையை காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த கொப்பம்பட்டி போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட ராஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இக்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் 5 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 5 பேருக்கும் ராஜா கொலையில் தொடர்பு இருக்கலாம்? என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.