ரீதர்சன் 
செய்திகள்

தேனீக்கள் வளர்ப்பை கற்று தந்தைக்கு உதவி வரும் 5 வயது சிறுவன்

தேனீக்கள் வளர்ப்பை பயமின்றி கற்று தந்தைக்கு உதவி வரும் 5 வயது சிறுவன் ஊரடங்கை பயனுள்ளதாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளான்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு நாட்களில் பெரும்பாலானோர் தங்களது பொன்னான பொழுதை வீட்டில் உறக்கம், உணவு, கேளிக்கை மற்றும் விளையாட்டுக்களுடன் கழித்துவரும் நிலையில் நத்தம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தேனீ வளர்க்கும் தொழிலை ஆர்வமுடன் கற்றுக் கொண்டுள்ளான். மேலும் அவனது தந்தைக்கு துணையாக நின்று தேனீக்களை லாவகமாக கையில் பிடித்து தேனை எடுத்து வருகிறான்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அமைந்துள்ளது பண்ணியமலை கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக தேனீக்களை வளர்த்து அதன் மூலம் தேனை எடுத்து விற்பனை செய்து வருகிறார். குணசேகரன் மாரியம்மாள் தம்பதியின் இரண்டாவது மகன் ரீதர்சன்.

யுகேஜி முடித்து தற்போது நத்தத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்துள்ளான். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனது தந்தையுடன் இணைந்து தோட்டத்தில் தேனீக்கள் வளர்க்கும் தொழிலை முழுமையாக கற்றுள்ளான்.

தேனை பாதுகாக்க தேனடையில் கூட்டம் கூட்டமாய் மொய்க்கும் எண்ணிலடங்கா தேனீக்கள் சூழ்ந்துள்ள தேனடையை கையில் எடுத்து அந்த தேனீக்களை லாவகமாக பிடித்து வெளியேற்றி தேனை இலகுவாக எடுக்கிறான் இந்த சிறுவன். தேனீக்களை பார்த்து தனக்கு துளியும் அச்சமில்லை என்று கூறும் இச்சிறுவன் தேனீக்களில் ராணி தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ என பல ரகங்கள் உள்ளன என கூறுகிறான்.

ஊரடங்கு காலத்தில் சிறுவர்கள் தெருவில் விளையாடுவது, செல்போன்கள் மூலம் பலவித விளையாட்டுகள் விளையாடுவதுமாக இருக்கும்  நிலையில் கிராமப்புற சிறுவன் தந்தையுடன் சேர்ந்து தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருவது அப்பகுதியைச் சேர்ந்த மற்ற சிறுவர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.

SCROLL FOR NEXT