ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டடத்தை குறித்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்தது.
தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு போலீசார் உட்பட பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும், மேலும் 7 வீரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட போலீஸ் குடியிருப்பு கட்டடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்கி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மேலும் 2 சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தீவிரவாதிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் டிஜிபி கூறுகையில், என்கவுண்ட்டர் நடவடிக்கை இறுதிகட்ட தருவாயில் உள்ளது. விரைவில் முடிக்கப்படும் என்றார்.