பாட்னா:
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியான நிதிஷ்குமார் கடந்த ஆண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் கள்ள சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. அதிகாரிகளும் கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டம் தன்வார் கிராமத்தில் நேற்று இரவு சிலர் கள்ள சாராயம் குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தன்ஜி சிங் (32), ஹரிஹர் சிங் (55), உதய் சிங் (32) மற்றும் கமலேஷ் சிங் (32) உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். ரவி சிங் மற்றும் கிருஷ்ணா சிங் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ள சாராயம் காய்ச்சி, விற்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.