செய்திகள்

மீன்கள் இனப்பெருக்க காலம் - 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

மீன் இனப்பெருக்க காலம் தொடங்குவதால் 60 நாட்கள் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. #FishingBan

ராமேசுவரம்:

ஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 60 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.

இந்த காலக்கட்டங்களில் தமிழக கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி கடல்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழப்பார்கள்.

மீன்பிடி தடை காலத்தில் நாட்டு படகுகளுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்படும். ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்படும்.

இந்த தடைக்காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலைகளை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைகாலங்களில் குடும்பம் நடத்த சிரமமாக உள்ளது. இதனால் நாங்கள் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு சென்று வேலை தேடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ் கிழக்கு கடற்கரைப்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும் மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருவதால் இக்காலங்களில் மீனவர்கள் மீன்பிடி கலன்களை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். #FishingBan