ஒகேனக்கல்:
கோடை விடுமுறையொட்டி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினாலும், தமிழக-கர்நாடக எல்லை பகுதிகளிலும், ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையினாலும் காவிரி ஆற்றில் தொடர்ந்து 1000 கனஅடி மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 1500 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று சற்று சரிந்து 1300 கனஅடியாக குறைந்தது.
தொடர்ந்து வரும் நீர்வரத்தால் ஒகேனக்கல் பகுதிகளில் அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மெயின அருவி, சினிபால்ஸ் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிய தொடங்கி உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மெயின அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய இடங்களில் எண்ணெய் மசாஜ் செய்து பின்னர் அவர்கள் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தொங்கும் பாலம், முதலை பண்ணைகள் சுற்றி பார்த்துவிட்டு சாப்பிடுவதற்காக ஓட்டல்களில் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன்கள் சாப்பிடுவதற்காக அதிக ஆர்வம் காட்டினர். இதற்காக மீன் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அங்கு லோகு, கட்லா, கெளுத்தி, கல்பாசி உள்ளிட்ட வகைகளில் மீன்கள் ஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது.
ஒரு கிலோ லோகு, கட்லா வகைகள் ரூ.200-க்கும், கெளுத்தி வகை மீன்கள் ஒருகிலோ ரூ.150-க்கும் விற்பனையாகிறது. அதனை சமைத்து கொடுக்கவும், வறுத்து கொடுப்பதற்கும் ரூ.100 முதல் 200 வரை சமையல்காரர்கள் வாங்கி கொள்கின்றனர்.
இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறும்போது:
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளதால் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சாதாரண நாட்களிலேயே இங்கு ஒரு டன் மீன்கள் விற்பனை நடைபெறும். சீசன் நேரம் அதாவது கோடை கால விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் 3 டன் அளவில் மீன்கள் விற்பனை அதிகரிக்கும்.
ஒகேனக்கல் ஆற்றில் பிடிப்படும் மீன் வகைகள் விற்பனைக்கு போதாது என்பதால் மேட்டூர் அணையில் இருந்து தினமும் 3 டன் அளவிற்கு மீன்கள் இறக்குமதி செய்யபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.