சென்னை:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சீன மோட்டார் என்ஜின் பொறுத்தி விசைப் படகுகளில் மீன்பிடிப்பதை கண்டித்து விசைப்படகு உரிமையாளர்களும், மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டபோது போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். போலீஸ் தடியடியில் 10 பேர் காயம் அடைந்தனர்.
போலீசாரின் தடியடி நடவடிக்கையை கண்டித்து மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் வருகிற 1-ந்தேதி அடையாள உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
ராயபுரம், கிழக்கு மாதா கோவில் தெருவில் நடக்கும் உண்ணாவிரதத்துக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கே.ஆர்.செல்வராஜ்குமார் தலைமை தாங்குகிறார். சங்க தலைவர் எம்.ஆர்.தியாகராஜன், நிர்வாகிகள் டேனியல், மகேஸ்வரன், பழவை சுகவனேஸ்வரன், ராயபுரம் டில்லியாதவ், ரவி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
இதுகுறித்து வக்கீல் கே.ஆர்.செல்வராஜ் குமார் கூறியதாவது:-
மீனவ மக்கள் மீது தடியடி நடத்திய ராயபுரம் காவல் துறையையும், அதற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி அறவழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். மீனவர்களுக்கும் ஆழ்கடல் பிடி சாதனம் மற்றும் படகு வழங்க வேண்டும். 5 ஆயிரம் பேருக்கு ஆழ்கடல் மீன்பிடி பயிற்சி அளிக்க வேண்டும்.
சீன என்ஜின், மீன் விற்பனை இடமாற்றம், தொழில் இல்லாமல் பாதிக்கப்படும். மீனவர்களுக்கு தீர்வு காணவும் அமைதியான முறையில் கூடிய மீனவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. மீனவர் பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு உரிய தீர்ப்பு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.