செய்திகள்

மாயமான மீனவர்களை மீட்க கோரி கடலோர மாவட்ட மீனவர்கள் போராட்டம்

மாயமான மீனவர்களை மீட்க கோரி முட்டம்,ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளைத் தோப்பு, பெரியகாடு உள்பட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்:

கடந்த நவம்பர் 30-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

புயலின்போது மீன் பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். அவர்களில் பலர் லட்சத்தீவு, கேரளா, கோவா, மராட்டியம், குஜராத் மாநில கடற்கரையில் தத்தளித்தனர்.

அவர்களை கடலோர காவல் படையினரும், கடற்படை வீரர்களும் மீட்டு வருகிறார்கள். இன்னும் ஏராளமான மீனவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாததால் அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

10 நாட்கள் ஆகியும் மீனவர்கள் மீட்கப்படாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து தவிக்கிறார்கள். மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் குழித்துறையில் ஆர்ப்பாட்டம், பேரணி, ரெயில் மறியல், சாலை மறியலில் ஈடுபட்டனர். 4-வது நாளாக இன்றும் குமரி மாவட்டத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இன்று கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளான முட்டம், ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால், பிள்ளைத் தோப்பு, பெரியகாடு, கேசவன் புத்தன் துறை, பள்ளம், அன்னைநகர், கடியப்பட்டணம், பொழிக் கரை உள்பட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆங்காங்கே கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து கடலில் கைகோர்த்து நின்றபடி மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோ‌ஷம் எழுப்பினர்.

முட்டம் கடற்கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்பு கொடியுடன் படகுகளில் ஏறி கடலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள், சிறுவர்-சிறுமிகளும் பங்கேற்றனர்.

ராஜாக்கமங்கலம் துறையில் மீனவர்கள் கடற்கரையில் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றபடி கோ‌ஷம் எழுப்பியும், கடலில் கருப்பு கொடி ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

பள்ளம், அன்னைநகர் ஆகிய இடங்களிலும் கடலில் இறங்கி பங்குதந்தை தலைமையில் போராட்டம் நடத்தினர்.

குமரி மாவட்டத்தில் தொடங்கிய போராட்டம் மீனவர்கள் வசிக்கும் மற்ற கடலோர மாவட்டங்களுக்கும் பரவியது.

மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மீனவவர்கள் கண்டன பேரணி நடத்தினர்.

பாட்டை குப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானிக்குப்பம் வெங்கடேச பெருமாள் நகர் ஆகிய 4 மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 900 பேர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கோட்டகுப்பம் பகுதி மீனவர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுவை-சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் அவர்களை சமாதானம் பேசியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதிக்குட்பட்ட தந்திராயன் குப்பம், சோதனைகுப்பம், சின்ன முதலியார்சாவடி, பிள்ளை சாவடி, பொம்மையார் பாளையம், நடுக்குப்பம் ஆகிய 6 கிராமத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பெண்களுடன் இன்று காலை கோட்டக்குப்பம் பகுதியில் திரண்டனர்.

கையில் கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஊர்வலமாக சென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்களும், காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர்களும் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீனவர்களை மீட்கக்கோரி கோஷம் எழுப்பிய காட்சி.

கைகளில் கறுப்பு கொடி வைத்திருந்தனர். சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அவர்கள் மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், காணாமல் போன மீனவர்களை உடனே மீட்க வலியுறுத்தியும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெண்கள் தரையில் அமர்ந்து கதறி அழுது ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தார்.

கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் முன்பு தமிழர் இயக்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே 50 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

நாகையை சேர்ந்த 12 மீனவர்கள் ஒக்கி புயலில் மாயமானார்கள். அவர்களை மீட்க கோரி நாகை நம்பியார் நகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று இரவு முதல் அங்குள்ள சமுதாய கூடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாகவும் காத்திருப்பு போராட்டம் நடந்தது. நாளை நாகை- காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி பேச்சு நடத்த இன்று மீன்வளத் துறை உதவி இயக்குனர் கங்காதரன் வந்தார். அவரை போராட்டத்தில் இருந்த மீனவ பெண்களும், ஆண்களும் முற்றுகையிட்டனர். போலீசார் விரைந்து வந்து உதவி இயக்குனரை மீட்டனர்.

நாகை எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரியும் மீனவர்களிடம் பேச்சு நடத்தினார். அவரிடம் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தாருங்கள்’ என்று பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரெயில் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.

நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் மீனவர்கள் பேரணியாக சென்றனர். புனித லூர்து மாதா ஆலயம் முன்பு தொடங்கிய பேரணி அப்பகுதி முழுவதும் சுற்றி வந்தது.

இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.