ராமேசுவரம்:
தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 5 நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் சூறாவளி காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். ரூ.6 கோடிக்கும் மேலான மீன், இறால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பாம்பன் கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசிவருவதால் ரெயில் பாலத்தில் கடந்த 5 நாட்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. மண்டபத்தில் இருந்து அனைத்து ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தனுஷ்கோடியில் கடலில் இறங்கவும், அரிச்சல்முனை பகுதிக்கு செல்லவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு முதல் தனுஷ்கோடி, ராமேசுவரம் பகுதியில் வழக்கைத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. 6-வது நாளான இன்று காலையும் அதே நிலைதான் நீடிக்கிறது. தனுஷ்கோடி, அரிச்சல் முனை, ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில் புழுதி காற்று வீசி வருகிறது.
இதனால் தனுஷ்கோடி சாலை முழுவதும் மணலால் மூடப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற பகுதிகளில் வாகன ஓட்டிகள், பொது மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இன்றும் கடல் சீற்றம் இருப்பதால் 6-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீடிக்கிறது.