நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகி விட்டனர்.
இவர்களில் 2 மீனவர்களின் உடல்கள் நேற்று மேற்கு மாவட்ட கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. இதுபோல வேறு உடல்கள் கரை ஒதுங்குகிறதா? என்பதை பார்க்க இன்று காலை முதலே நீரோடி துறை, இரயுமன்துறை, ராமன்துறை கடற்கரைகளில் மீனவ பெண்களின் கூட்டம் அலைமோதியது.
கண்களில் கண்ணீர் வடிய கரையை தொடும் அலைகளில் உடல்கள் உருட்டி வரப்படுகிறதா? என்பதை அவர்கள் ஓடோடி சென்று பார்த்தனர்.
அப்போது நீரோடி துறையைச் சேர்ந்த மீனவர் ராஜு என்பவர் மீட்கப்பட்டு கரைக்கு வந்து சேர்ந்தார். அவரை உறவினர்கள் கட்டி அணைத்து ஆனந்த கண்ணீர் விட்டனர். உயிர் தப்பியது பற்றி அவர் கூறியதாவது:-
நீரோடி துறையில் இருந்து 6 பேருடன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 28-ந்தேதியே சென்று விட்டோம். 30-ந்தேதி தான் சூறைக்காற்று வீசியது.
எங்களின் படகு தூக்கி வீசப்பட்டதில் நானும், என்னோடு இருந்தவர்களும் கடலில் விழுந்தோம். என் கண் எதிரே 3 பேர் கடலுக்குள் மூழ்கினர். நான் மட்டும் உடைந்த படகின் துண்டுகளை பிடித்துக் கொண்டு நீந்தினேன். கடவுளின் அருளால் அந்த வழியாக கட்டுமரத்தில் வந்தவர்கள் என்னை மீட்டனர். என்னோடு இருந்த மற்றவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நீரோடி துறையில் இருந்து கடலுக்கு சென்ற வர்கீஸ் என்பவரின் தாயார் கடற்கரையில் நின்றபடி அலைகளை பார்த்துக் கொண்டு இருந்தார். இதுபோல ஏராளமானோர் உறவினர்களை காணவில்லை என்று கதறியபடி சுற்றி வந்தனர். அப்போது மகனை தேடி அலைந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.