அகமதாபாத்:
குஜராத்தில் தொடர்ந்து 22 ஆண்டாக ஆட்சி செய்து வரும் பா.ஜ.க., 5-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரம் காங்கிரஸ் தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ள ராகுல் காந்தியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக குஜராத் சட்டப்பேரவை தேர்தல் உள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 15 பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்தார். இதேபோல் காங்கிரஸ் சார்பில் துணைத்தலைவர் ராகுல் காந்தி 7 நாட்கள் முகாமிட்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். இது தவிர பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாலையுடன் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நடைபெறும் இத்தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில், பா.ஜ.க. சார்பில் முதல்வர் விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதல் கட்ட தேர்தலில் நடைபெறும் 89 தொகுதிகளில் 2.12 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 24,689 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். இதற்காக 27,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய ரசீது வழங்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2-ம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.