செய்திகள்

2018-ம் ஆண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இலவச கல்வி - பெங்களூரு மேயர் அறிவிப்பு

பெங்களூரு அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு கல்லூரி வரை இலவச கல்வி வழங்கப்படும் என மேயர் அறிவித்துள்ளார்.

மாலை மலர்

பெங்களூரு:

இந்தியாவில் பெண் சிசு கொலை மிகவும் அதிகமாக உள்ளது. பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள் அனாதை இல்லங்களில் விடுகின்றனர். திருமணச் செலவு, வரதட்சணை போன்ற காரணங்களால் பல குடும்பங்களில் பெண் குழந்தையைச் சிசுவிலேயே கொல்லும் கொடுமையும் நடக்கிறது. குறிப்பாக இந்தப் போக்கு வட மாநிலங்களிலேயே அதிக அளவில் உள்ளது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லை.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் மேயர், பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் விதத்தில் சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி 2018-ம் ஆண்டில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு கல்லூரி படிக்கும் வரை இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மாநகராட்சி கண்காணிப்பாளர் மற்றும் அந்த குழந்தை பெயரில் கூட்டாக வங்கி கணக்கு தொடங்கி அதில் 5 லட்சம் ரூபாய் போடப்படும். அதனை குழந்தையின் கல்விக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

வறுமையான குடும்பத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பெண் குழந்தையை வளர்ப்பதை பாரமாக எண்ணலாம். அந்த எண்ணத்தை போக்கவே இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. ஜனவரி 1-ம் தேதியில் பிறக்கும் முதல் குழந்தைக்கு இது வழங்கப்படும். சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த சலுகை என பெங்களூரு மேயர் சம்பத் ராஜ் தெரிவித்தார்.