செய்திகள்

முன்னர் கரப்பான் பூச்சி, தற்போது மிரட்டல் கடிதம்: விமான பயணத்தை ‘கிலி’யாக்கிய ஆசாமி

டெல்லியில் இருந்து மும்பைக்கு நேற்று சென்ற விமானத்தை கடத்தியுள்ளதாக கண்டெடுக்கப்பட்ட துண்டுச்சீட்டு விவகாரத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சிக்கியுள்ள நிலையில் விமானத்தில் பறக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

அகமதாபாத்:

டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 9W339 என்ற விமானம் 115 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதிகாலை மூன்று மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தின் கழிவறையில் ஒர் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

விமானம் கடத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கி திருப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த விமான சிப்பந்திகள் உடனே பைலட்டிடம் விஷயத்தை கூற விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து, விமானத்தை முழுவதுமாக சோதனையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தும் வகையிலான பொருட்கள் எதையும் கண்டெடுக்கவில்லை. இதனையடுத்து, விமானிகள், சிப்பந்திகள் மற்றும் 115 பயணிகளையும் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தினர்.

விமானம் கிளம்பியதும் கழிவறையில் டிஷ்யூ பேப்பர்கள் காணமல் போனதால், புதிய டிஸ்யூ எடுக்க சிப்பந்தி சென்றுள்ளார். இடைப்பட்ட நேரத்தில், குஜராத்தை சேர்ந்த சல்லா பிரிஜ்ஜு என்ற தொழிலதிபர் மட்டுமே கழிவறையை பயன்படுத்தியுள்ளார். புதிய டிஷ்யூ வைக்க சிப்பந்தி வரும் போது ஒரு துண்டுச்சீட்டு கிடந்துள்ளது. அந்த சீட்டில் தான் மேலே கண்ட மிரட்டல் வாசகம் எழுதப்பட்டிருந்தது.

இந்த விபரங்களை சிப்பந்திகள் அதிகாரிகளிடம் கூறியதை அடுத்து, சல்லா பிரிஜ்ஜு தீவிர விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், விமானங்களில் சல்லா பிரிஜ்ஜு பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் விமானம் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக சல்லா பிரிஜ்ஜு புகார் எழுப்பி பரபரப்பை கிளப்பியிருந்தார். ஆனால், வேகவைக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி வேகாமல் இருந்துள்ளதை சுட்டிக்காட்டிய சிப்பந்திகள் இது நாடகம் போல தெரிகிறது என கூறியிருந்தனர். இவ்விவகாரமும் பெரிய பிரச்சனை ஆகாமல் பேசி சரி செய்யப்பட்டது.

தற்போது, இதே சல்லா பிரிஜ்ஜு மிரட்டல் கடிதம் விவகாரத்திலும் சிக்கியுள்ளதால் கடிதத்தை அவரே கொண்டு வந்து கழிவறையில் வைத்திருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுகின்றது.