செய்திகள்

நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரெயில் சேவை மும்பையில் இன்று தொடங்கியது

இந்தியாவில் முதன் முறையாக ஏ.சி வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் புறநகர் ரெயில் சேவை மும்பையில் இன்று தொடங்கப்பட்டது.

மும்பை:

சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் இருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு சாதாரண மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தடங்களில் ஏ.சி. ரெயில்களையும் இயக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.

இதன் முதற்கட்டமாக ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில்கள் மும்பையின் சர்ச்கேட் - பொரிவ்லி இடையே இன்று அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி மற்றும் தானியங்கி கதவுகள் கொண்ட 12 பெட்டிகளுடன் இந்த புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை, கொல்கத்தா, செகந்திராபாத் போன்ற நகரங்களுக்கும் இந்த ‘ஏ.சி’. வசதி கொண்ட புறநகர் ரெயில்களை விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த ‘ஏ.சி’. ரெயில்கள் இயக்கப்பட்டாலும், பழைய ரெயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரெயில்வே துறை, இரண்டுக்குமான டிக்கெட் விலையில் மாற்றம் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

மும்பையில் இன்று தொடங்கப்பட்டுள்ள ‘ஏ.சி’. வசதி கொண்ட புறநகர் ரெயில்கள் சென்னையில் இயங்கி வரும் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.