விருதுநகர்:
சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு வெடிக்க தடை கோரும் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ரூ. 250 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக வணிகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என பலரும் ‘பந்த்’ ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பட்டாசு குழாய் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதனால் திருத்தங்கலில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றத் தொகுதி செயலாளர் மனிதநேயன் தலைமையில் 30 பேர் திரண்டு திருத்தங்கல் ரெயில் நிலையம் வந்தனர்.
அவர்கள் மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும், நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே ஒரு தரப்பினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews