செய்திகள்

ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் கலெக்டரிடம் மனு

பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் சுமார் ரூ. 70 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை அதிபர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை தனித்தனியாக சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.

மாலை மலர்

விருதுநகர்:

ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வலியுறுத்தி பட்டாசு ஆலை அதிபர்கள் கலெக்டரிடம் இன்று மனு கொடுத்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆலைகளை பூட்டி சாவிகளை ஒப்படைப்போம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வந்தன. இந்த ஆலைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியினால் இந்த தொழில் மிகவும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கடந்த 30-ந் தேதி முதல் ஆலைகளை மூடி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் ரூ. 70 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்தம், சீன பட்டாசுகளின் தடையற்ற வரத்துக்கு காரணமாகி விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

போராட்டத்தை தொடருவது குறித்து சிவகாசியில் நேற்று தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடிகள் உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) அலுவலகத்தில் பட்டாசு அதிபர் களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் சங்கத்தலைவர் ஆசைத் தம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

28 சதவீத வரி விதிப்பால் பட்டாசு தொழில் நலிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று மாவட்ட கலெக்டரிடம் தனித்தனியாக மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

அதன் பிறகும் எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பட்டாசு ஆலைகளை பூட்டி சாவிகளை ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இன்று பட்டாசு ஆலை அதிபர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை தனித்தனியாக சந்தித்து மனு கொடுத்தனர். ஜி.எஸ்.டி.யால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு, தொழிலாளர்கள் வேலை இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் அதில் வலியுறுத்தி உள்ளனர்.