செய்திகள்

சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஜாபர்கான்பேட்டை, அடையாறு கரையோரத்தில் தீயணைப்பு வீரர்கள்

ஜாபர்கான்பேட்டை, அடையாறு தரைப்பாலத்தில் இருந்து யாரும் வேடிக்கை பார்க்கும் போது தவறி விழுந்து விட்டால் அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

சென்னையில் 2015-ம் ஆண்டில் வெள்ள பாதிப்பின்போது அடையாறு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளமாக திரண்டு வந்த மழை நீர் எம்.ஜி.ஆர். நகர், சைதாப்பேட்டை ஆற்று கரையோரங்களில் இருந்த வீடுகளில் புகுந்தது.

தற்போது பருவமழை தீவிரமாகி கொட்டி வருகிறது. 2 நாட்கள் பெய்த மழையில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜாபர்கான் பேட்டை தரைப்பாலத்தை தட்டியபடி தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

தரைப்பாலத்தில் இருந்து யாரும் வேடிக்கை பார்க்கும் போது தவறி விழுந்து விட்டால் அவர்களை மீட்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜாபர்கான்பேட்டை பாலத்தில் நிறுத்தப்பட்டுள்ள தீயணைப்பு வண்டியில் 6 வீரர்கள் ரப்பர் படகு, பைப் ஜாக்கெட்டுடன் தயாராக நின்றனர்.

பாலத்தில் நின்று யாரும் செல்போனில் படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ அனுமதிக்கவில்லை. அந்த வழியாக கடந்து செல்பவர்களை தீயணைப்பு வீரர்கள் கண்காணித்தவாறு இருந்தனர்.

இதே போல சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பாலம் அருகேயும் தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. வேளச்சேரி ராம்நகர், முடிச்சூர் பகுதியிலும் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பு கடுமையாக இருந்தது.


தற்போது அந்த பகுதியிலும் தீயணைப்பு வீரர்கள் படகுகளுடன் தயாராக இருக்கிறார்கள். துரைப்பாக்கம், தலைமை செயலக காலனியிலும் தீயணைப்பு வண்டி நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர சென்னையில் 50 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து 50 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணியில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் கண்டறியப்பட்டு சென்னையில் முக்கிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.