தீ விபத்து 
செய்திகள்

கப்பலூரில் பெட்ரோல், டீசல் கிடங்கில் தீ விபத்து- தொழிலாளி பலி

திருமங்கலம் அருகே கப்பலூரில் பெட்ரோல், டீசல் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளி உடல் கருகி பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

திருமங்கலம்:

திருமங்கலம் அருகே கப்பலூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் உள்ளது. இதன் அருகே உள்ள சொக்கநாதன்பட்டி செல்லும் வழியில் சட்ட விரோதமாக ஒரு தரப்பினர் குடோன் போல அமைத்து மண்எண்ணை, டீசல், பெட்ரோல் விற்பனை செய்து வந்தனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்தில் இருந்து பெட்ரோல், டீசல், மண்எண்ணை டேங்கர் லாரிகள் மூலம் தென்மாவட்டங்களுக்கு செல்கிறது. அதற்கு முன்பாக டேங்கர் லாரியில் இருந்து அதனை திருடும் கும்பல், இந்த குடோனில் வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோல், டீசலில் பற்றிய தீ கண் இமைக்கும் நேரத்தில் குடோன் முழுவதும் பரவியது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் கூக்குரலிட்டனர். ஆனால் அவர்களால் வெளியே வரமுடிய வில்லை. தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேரத்தும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் அங்கிருந்த திருமங்கலம், கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூச்சி மகன் கணேசன் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

ஆசை (50), விஜயகுமார் (35), கார்த்திக் (24), ஆறுமுகம் (66) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டி.எஸ்.பி. அருண் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.