தீவிபத்து 
செய்திகள்

கோவையில் குடிசையில் தீ விபத்து- தொழிலாளி பலி

கோவையில் குடிசையில் தீ விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோவை:

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் திருவேங்கடம். இவரது மகன் சகாதேவன் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் கோவை கொடிசியா பின்புறம் நடைபெற்று வரும் கட்டிடம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக கட்டுமானம் நடைபெற்று வரும் கட்டிடத்தின் அருகே ஓலை குடிசை அமைத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

சகாதேவன் நேற்று விடுமுறை என்பதால் மது குடித்துள்ளார். பின்னர் குடிசையில் படுத்து தூங்கினார். அப்போது திடீரென சகாதேவன் தங்கி இருந்து குடிசை தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பக்கத்து குடிசையில் தங்கி இருந்த தொழிலாளிகள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குடிசைக்குள் சகாதேவன் உடல் கருகி இறந்து கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் உடல் கருகி இறந்த சகாதேவனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாதேவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சிகரெட்டை அணைக்காமல் குடிபோதையில் தீ பிடித்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.