அண்ணாநகர்:
அண்ணா நகர் 3-வது அவென்யூவில் பிரபல தனியார் உணவகம் உள்ளது. இங்கு திருநெல்வேலியை சேர்ந்த வெனிட் சகாயம் (26) உள்பட 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் வெனிட் சகாயம் உள்பட ஊழியர்கள் உணவகத்தில் இருந்தனர். அப்போது திடீரென அங்குள்ள அறையில் தீப்பிடித்தது.
தீ மளமளவென உணவகம் முழுவதும் பரவியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். கழிவறைக்கு சென்ற வெனிட் சகாயத்தால் வெளியே வரமுடியவில்லை.
புகை மூட்டத்தில் சிக்கிய அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைத்து மயங்கிய நிலையில் இருந்த வெனிட் சகாயத்தை மீட்டனர்.
பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மூச்சுதிணறல் ஏற்பட்டு வெனிட்சகாயம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.